நினைவேந்துவதால் எவரும் உயிர்க்கப்போவதில்லையாம்! – விமல், கம்மன்பில கூறுகின்றனர்

editor 2

“நினைவேந்தல் நிகழ்வுகளால் உயிரிழந்தவர்களைத் தட்டி எழுப்ப முடியாது. எனவே, இன நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் நினைவேந்தல்களை நிறுத்துமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.”

– இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்தனர்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் கறுப்பு ஜூலை நினைவேந்தல் குழப்பியடிக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,

“ஜூலையில் குருதிக்களரியை ஏற்படுத்தியது விடுதலைப்புலிகள்தான். வடக்கில் படையினர் மீது புலிகள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல்தான் தெற்கில் மோதலாக வெடித்தது. அந்தச் சம்பவத்தை மறக்க வேண்டிய நிலையிலிருக்க வேண்டிய நாம் மீண்டும் அதை நினைவுபடுத்தும் வகையில், ஒரு குழப்பத்தை விரும்பும் வகையில் நினைவேந்தல் என்ற பெயரில் கலவரத்தை ஏற்படுத்த முனைவதை ஏற்க முடியாது.

கொழும்பு நினைவேந்தலை வேண்டுமென்றே ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் புலம்பெயர் தமிழர்களின் நிதி உதவியுடன் இயங்குபவர்கள். உயிரிழந்த புலிகளையும் (முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்) நினைவேந்தும் இந்தக் குழுதான் நேற்றுமுன்தினம் அந்த நிகழ்வையும் நடத்தியது. இதுதான் எமது மக்களின் ஆத்திரத்துக்குக் காரணம்.

இப்படியான நினைவேந்தல் கொழும்பில் தேவையற்றது. வேண்டும் என்றால் அதை வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் நடத்தட்டும்.

அமைதியான தலைநகர் கொழும்பை குருதி ஆறு ஓடும் பூமியாக மாற்ற முயலும் தரப்பினர் நாட்டின் இன ஒற்றுமை கருதிச் செயற்பட வேண்டும்.” – என்றனர். 

Share This Article