மீண்டுமொரு கலவரத்துக்குத் தூபமிடும் இனவாத அமைப்புக்களை உடன் தடை செய்க! – சந்திரிகா வலியுறுத்து

editor 2

“கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்டவர்களுக்காகக் கொழும்பில் நினைவேந்தலைக் கடைப்பிடிக்கவிடாமல் தடுத்தமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்குப் பொலிஸார் துணைபோனமையும் கண்டனத்துக்குரியது.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கொழும்பு பொரளையில் நேற்றுமுன்தினம் இடம்பெறவிருந்த நினைவேந்தல் நிகழ்வை சிங்கள ராவய மற்றும் பொலிஸார் – இராணுவத்தினர் இணைந்து குழப்பியிருந்தனர். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த சந்திரிகா,

“கறுப்பு ஜூலை கலவரமொன்று மீண்டும் நாட்டில் இடம்பெறக்கூடாது என்பதுதான் ஜனநாயகத்தை விரும்பும் அனைவரினதும் பிரார்த்தனையாகும். அந்தச் சம்பவம் எதனால் இடம்பெற்றது என்பது தொடர்பில் விளக்கமளிக்கவேண்டிய அவசியமில்லை.

அந்தக் கலவரத்தில் உயிரிழந்தவர்களைக் கொழும்பில் நினைவேந்த முற்பட்டமையைத் தடுத்து நிறுத்தியமை கண்டிக்கத்தக்கது. அங்கு பொலிஸார் நடந்துகொண்ட விதமும் கண்டனத்துக்குரியது.

மக்கள் தம் நினைவேந்தல் உரிமையின் பிரகாரம் உயிரிழந்தவர்களை நினைவேந்தியபோதும் அதை இனவாதநோக்குடன் பார்த்த அந்த இனவாத அமைப்பையும் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

மீண்டும் ஒரு கலவரத்துக்குத் தூபமிடும் இத்தகைய இனவாத அமைப்புக்கள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்.” – என்றார்.

Share This Article