வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா அடுத்த மாதம் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், திருவிழா தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ். மாநகர சபையால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று யாழ். மாநகரசபையின் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் வருமாறு:-
* ஓகஸ்ட் 20 ஆம் திகதி மதியத்திலிருந்து நல்லூர் ஆலயச் சுற்றுவீதிகளில் வழமைபோல் போக்குவரத்து முற்றாகத் தடை செய்யப்பட்டு செப்டெம்பர் 16 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும். வர்த்தக நடவடிக்கைகளுக்காக குறித்த நேரத்தில் வாகனங்கள் உட்செல்ல அனுமதிக்கப்படும். வழமைபோல் ஆலய சூழலில் வசிப்பவர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கான பாஸ் யாழ். மாநகர சபையால் வழங்கப்படும்.
* ஆலய வெளி வீதியைச் சூ,ழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடைப் பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வாகனம் மற்றும் கழிவகற்றும் வாகனங்களைத் தவிர எக்காரணம் கொண்டும் வேறு வாகனங்கள் உட் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அதேபோல் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடைப் பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார, விளம்பர நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது. ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி திருவிழா நாள்களில் காணொளிப் பதிவு செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. காலணிகளுடன் ஆலயச் சுற்று வீதியில் நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
* ஆலயத்துக்கு நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற வருகின்ற தூக்குக்காவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் சிறீ முருகன் தண்ணீர்ப் பந்தலின் முன் இறக்கப்பட்டதும், தூக்குக் காவடி வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
* வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் வழமைபோல் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ். மாநகர சபைக்கு முன்பாக உள்ள நல்லூர் குறுக்கு வீதியால் பயணித்து நாவலர் வீதியூடாக ஆனைப்பந்திச் சந்தியை அடைந்து யாழ். நகரை அடைய முடியும். யாழ். நகரில் இருந்து திரும்பும் வாகனங்கள் அதே பாதையூடாக பருத்தித்துறை வீதியை அடையும். ஆனால், இறுதி விசேட திருவிழாக்களின் போது வழமைபோல் கச்சேரி – நல்லூர் வீதியூடாக நாவலர் வீதியை அடைந்து பயணிக்க முடியும் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.