“13ஐ உதறித் தள்ளவும் முடியாது; அது தமிழரின் இறுதித் தீர்வுமல்ல!”

editor 2

“13ஆவது திருத்தச் சட்டத்தை உதறித் தள்ளிவிட்டு நாம் அனைத்தையும் பெறமுடியாது. ஆனால் இதுவே முழுமையான தீர்வுமல்ல.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் கொழும்பு அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதிகாரப் பகிர்வுகான இயக்கத்தின் ஏற்பாட்டில் ’13 ஆவது திருத்தச் சட்டத்தை  முழுமையாக நடைமுறைபடுத்துவதும் இந்தியாவின் வகிபாகமும்’  என்ற தலைப்பிலான கலந்துரையாடல் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அருகில் உள்ள செல்வநாயகம் நினைவு கலையரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு கூறினர்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை தமிழர் மகா சபையின் தலைவர் கா.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.டி.பி. சார்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் அந்தக் கட்சியின் செயலர் பூ.பிரசாந்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு சிறீதரன், சமத்துவக் கட்சியின் தலைவர் மு.சந்திரகுமார், ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலர் இ.பிரபாகரன், புளொட் சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் உரையாற்றினர்.

இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வியாழேந்திரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொள்வதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டபோதும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. 

Share This Article