முல்லைத்தீவு மனிதப் புதைகுழி ஜூலை 20 மீண்டும் தோண்டப்படலாம்! – சர்வதேச கண்காணிப்பாளர்கள் தாமாக வருகை தரமுடியும்

editor 2

முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் தோண்டப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தோண்டுவது தொடர்பில் நேற்று நடந்த கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாயில் குடிதண்ணீர் குழாய்களைப் பொருத்துவதற்காக வீதியோரம் குழி தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியைத் தோண்டுவது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தலைமையில் நேற்றுக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தப் புதைகுழியின் நீள அகலத்தை இனம் காணும் பொருட்டு நடந்த பூர்வாங்கப் பணிகளின்போது 13 மனிதர்களுடையவை என்று கருதப்படும் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருந்த பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்தும், பணிகளின் தராதரத்தைப் பேணுவது தொடர்பாகவும் நேற்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல்த் திணைக்கள அதகாரிகள், பொலிஸார், சட்டத்தரணிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மனிதப் புதைகுழி கணப்படும் இடத்தில் தேவையற்ற வகையில் அதிக புலனாய்வாளர்கள் நடமாடுவது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேநேரம் இனிவரும் காலத்தில் இடம்பெறும் அகழ்வுப் பணியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத் தொல்லியல்துறை மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

அகழ்வுப் பணிகளின்போது சர்வதேசப் பிரதிநிதிகள் பிரசன்னம் அவசியமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இவற்றை ஆராய்ந்த நீதிபதி புலனாய்வாளர்களில் தேவையானோர் தவிர்ந்த ஏனையோரின் நடமாட்டம் அகழ்வுப் பணிகளின்போது கட்டுப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். அகழ்வுப் பணிகளில் பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களுக்குப் பதிலாக தொல்லியல் பீடத்தின் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை இணைக்க முடியும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

அகழ்வுப் பணிகளுக்காகச் சர்வதேசப் பிரதிநிதிகளைத் தன்னால் நேரில் அழைக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய நீதிபதி, ஆனால் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் தாமாகக் கண்காணிப்புப் பணிகளுக்கு முன்வந்தால் தடுக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவித்தார்.

Share This Article