பொலிஸ், இராணுவம் கொடுக்கும் வலியைவிடச் சமூகம் கொடுக்கும் வலி மிகக் கொடுமை! – முன்னாள் போராளி ஆதங்கம்

editor 2

பொலிஸ், இராணுவம் கொடுக்கும் வலியைவிட சமூகம் கொடுக்கும் வலி மிகவும் கொடுமையானது என முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்தார்.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் முதலாவது அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“விழுப்புண்ணால் பாதிக்கப்பட்டு தொடர்ந்தும் இன்றுவரை காயங்களோடு போராடி கொண்டிருக்கின்றவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது. மரணமாகி மரணச்சடங்கைச் செய்வதைவிட அவர்கள் வாழ்வதற்கான ஒரு விடயத்தை முன்னெடுக்க விரும்புகின்றோம்.

இங்கே இருக்கின்ற முன்னாள் போராளிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் மேலெழுந்து வந்திருந்தாலும் அநேகமானவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழும், வாழ்வாதாரத்துக்காகப் போராடுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது.

அரசு செய்ய வேண்டிய கடமையைப் போராளிகளுக்குச் செய்யாததால் இன்றுவரை தமது வாழ்க்கைக்காகப்  போராடிக்கொண்டு இருக்கின்ற சமூகமாகவே இருக்கின்றோம்.

இனிமேலாவது போராளிகளுடைய புறக்கணிப்புக்கள் அல்லது வேற்றுமைகளைக் கடந்து தமிழினத்துக்கு ஒட்டுமொத்தமானதொரு சேவையை ஆற்ற வேண்டிய கடப்பாட்டை உணர்ந்து போராளிகளை முதலில் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பொலிஸ், இராணுவம் அடக்குமுறைகள் அத்தோடு உளவியல் ரீதியான தாக்கத்தை விட சமூக ஒடுக்குதல்களாலே பாதிக்கப்படுகின்ற வலி மிகவும் அதிகளவாகவே இருக்கின்றது.

இராணுவம், பொலிஸ் திணைக்களங்களோடு போராடுகின்ற அதேநேரம் எங்களுடைய சொந்த மக்களோடும், சமூகத்தோடும் போராடுகின்றவர்களாகவே நாம் இருந்து வருகின்றோம்.

எனவே இவ்வாறான ஒரு நிலையிலே போராளிகளது நலனையும், சமூகத்தினுடைய நலனையும் கருத்தில்கொண்டு போராளிகள் நலன்புரிச் சங்கத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.

போராளிகள் நலன்புரிச் சங்கத்துக்குப் பொதுமக்கள், போராளிகள் அனைவரினதும் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். முதலாவது காரியாலயம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் காரியாலயம் திறந்து வைக்கப்படும்.” – என்றார்.

Share This Article