“ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எதுவும் நடக்கலாம். எனவே, தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர்தான் எந்த வேட்பாளரை நான் ஆதரிப்பேன் என்பதைப் பகிரங்கமாகக் கூறுவேன்.”
– இவ்வாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
‘அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கதான் என்று ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள் கூறுகின்றார்கள். அப்படி அவர் களமிறங்கினால் நீங்கள் அவரை ஆதரிப்பீர்களா?’ – என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இன்னும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. வேட்புமனு கோரப்படவில்லை. தேர்தலுக்குக் காலம் உண்டு. அதனால் இப்போதே அது பற்றி தீர்மானிக்க முடியாது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அந்த நேரத்தில்தான் முடிவெடுப்போம்.
தேர்தலுக்கு முன் எதுவும் நடக்கலாம். இப்போது ஒரு தீர்மானம் எடுத்தாலும் அதைத் தேர்தலில் மாற்ற வேண்டி ஏற்படலாம். அதனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் முடிவெடுப்பது ஆரோக்கியமானது.” – என்றார்.