முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு – குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர் ஆகியோரின் பதில் அறிக்கைக்காக எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் (AR/673/18), 12.06.2022 இற்கு முன்னிருந்த நிலையைப் பேணுமாறும், அதற்கு மேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் 19.07.2022 அன்று கட்டளை பிறப்பித்திருந்தது.
எனினும், நீதிமன்றம் இவ்வாறு கட்டளை வழங்கிய பிற்பாடும், நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர்மலையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
குறிப்பாக கடந்த 23.02.2023 அன்று குருந்தூர்மலைக்குத் தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரும் கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
அந்த விஜயத்தின் போது இவ்வாறு நீதிமன்றத்தின் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு நீதிமன்றக் கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுவது தொடர்பில் கள விஜயத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் அன்றைய தினமே (23.02.2023) முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து 02.03.2023 அன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் AR/673/18 என்னும் வழக்கிலக்கத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டு கட்டுமானப் பணிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவ்வாறு குருந்தூர்மலையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கண்காணிப்பதற்கு இன்று (04.07.2023) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா கள விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது குருந்தூர்மலையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற மேம்படுத்தல் லேலைகள் தொடர்பில் நீதிவானால் ஆராயப்பட்டது.
அதேவேளை, பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களம் இது தொடர்பான பதில் அறிக்கையை வழங்குவதற்காக எதிர்வரும் 08.08.2023 ஆம் திகதிக்குக் குறித்த வழக்கு நீதிவானால் திகதியிடப்பட்டது.
மேலும், நீதிவான் இன்று குருந்தூர்மலைக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்த போது, அங்கு இரு தரப்பு சட்டத்தரணிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், தண்ணிமுறிப்பு மக்கள், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்டவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.