முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு – குருந்தூர்மலையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா இன்று (04) கள விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது குருந்தூர்மலைப் பகுதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் வருகை தந்திருந்தார்.
இந்தநிலையில் நீதிவான் ரி.சரவணராஜா குறித்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை இரு தரப்பு சட்டத்தரணிகளுடனும் இணைந்து மேற்கொண்டிருந்தபோது இடையே குறுக்கிட்ட சரத் வீரசேகர எம்.பி., தன்னை அறிமுகப்படுத்தித் தானும் அங்கு கருத்துத் தெரிவிக்க முற்பட்டார்.
அப்போது அவரது கருத்தை ஏற்க மறுத்த நீதிவான், நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்துத் தெரிவிக்க முடியாது எனவும், இங்கு நீதிமன்ற விசாரணையே இடம்பெறுகின்றது எனவும், அங்கிருந்து சரத் வீரசேகரவை விலகிச் செல்லுமாறும் எச்சரித்தார்.
அதனைத் தொடர்ந்து சரத் வீரசேகர அங்கிருந்து விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.