யாழில் சிறுவர் மீதான வன்முறை உச்சம்! – பொலிஸ் நிலையங்களில் குவியும் முறைப்பாடுகள்

editor 2

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிறுவர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் உச்சளவில் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டில் மே மாதம் வரையான 5 மாதங்களில் மட்டும் 9 பொலிஸ் பிரிவுகளில் 53 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டில் பதிவான மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையிலும் விட அதிகமாகும்.

இதேசமயம், முறைப்பாடுகள் செய்யப்படாத – சம்பந்தப்பட்ட தரப்புகள் சமரசம் செய்த – மூடி மறைக்கப்பட்ட சம்பவங்கள் இதிலும் பல மடங்கு இருக்கலாம் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 பொலிஸ் நிலையப் பிரிவுகள் உள்ளன. இதில், யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்துக்கு உட்பட்ட 9 பொலிஸ் நிலைய பிரிவுகளிலேயே சிறுவர் மீதான 53 வன்முறை சம்பவங்கள் பதிவாகின. அத்துடன், பெண்களுக்கு எதிராகவும் 4 வன்முறை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இதில், சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அங்கு 14 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்து ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் 7 முறைப்பாடுகளும், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் தலா 6 முறைப்பாடுகளும், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 5, மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் 4, கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் 3 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

இந்த முறைப்பாடுகள் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், உடல், உள ரீதியான துன்புறுத்தல்கள் – தண்டனைகள் சார்ந்தவையாகும். இவை, வீடுகள், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களில் இடம்பெற்றுள்ளன என்றும் அறிய வருகின்றது.

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு – நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பில் பெற்றோர், பாதுகாவலர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்ய வேண்டும் என்றும், சந்தேகநபர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதன் மூலமே சிறுவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்றும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சிறுவர் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த நிலையிலேயே அண்மையில் பாடசாலை மாணவிகளை பாதுகாக்கும் நோக்கில் பொலிஸாரின் கண்காணிப்பில் வட்ஸ் அப் குழுக்களை நிர்வகிக்க பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Article