பொலிஸாரிடமிருந்து தப்பிய ஓட்டோ சாரதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காலி, கராபிட்டிய பிரதேசத்தில் உத்தரவை மீறிச் சென்ற ஓட்டோ மீது பொலிஸார் அண்மையில் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனா். அந்த ஓட்டோவின் சாரதி இன்று காலை பியதிகம பகுதியில் உள்ள ஆலயமொன்றுக்கு அருகில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
காலியில் இருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலில் தலையை வைத்து அவா் தற்கொலை செய்து கொண்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த நபர் 31 வயதுடையவர் எனவும், ஹபுகல, வக்வெல்ல பிரதேசத்தைச் சோ்ந்தவா் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகங்களிடம் இன்று தெரிவித்தார்.
கடந்த 22ஆம் திகதி காலி கராபிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. உத்தரவை மீறிச் சென்ற ஓட்டோ மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர். எவ்வாறாயினும், ஓட்டோவில் இருந்த இருவர் அதிலிருந்து தப்பிச் சென்றிருந்தனா்.
அதன்போது தப்பிச் சென்ற ஓட்டோவின் சாரதியே இன்று தற்கொலை செய்து கொண்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.