இலங்கையின் கடன் வழங்குநர்கள், உரிய காலத்தில் கடனை மறுசீரமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை, அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெல்லன் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு இலங்கையில் அங்கீகாரம் வழங்கப்பட்டமை மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கான சக்திமிக்க உள்ளுர் உரித்துடைமை குறித்து, அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக, ப்ரான்ஸின் பரிஸ் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு அமெரிக்க திறைசேரி செயலாளரை சந்தித்துள்ளார்.
இலங்கை மற்றும் கானா ஆகிய நாடுகள் வழங்கும் நிதி உத்தரவாதங்களுக்கு அமைய, கடன் நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் யெல்லன் தெரிவித்துள்ளார்.
தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ள நாடுகளுக்கு ஆதரவளிக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும்.
இலங்கை மற்றும் கானா ஆகிய நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றம் திருப்திகரமாக இருப்பதாகவும், அதன் மூலம் அமெரிக்கா ஊக்கமடைந்துள்ளதாகவும் ஜெனட் யெல்லன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸை சந்தித்து, முக்கிய பேச்சவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.