வடக்கில் மாணவர்கள் இன்மையால் 194 பாடசாலைகள் மூடல்! – ஆளுநர் தெரிவிப்பு

editor 2

வடக்கு மாகாணத்தில் ஏறக்குறைய 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா பாடசாலை வளாகத்தில் அதிபர் குலேந்திரகுமார் தலைமையில் இன்று (21) நடைபெற்றது. இதில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கிலே நாங்கள் ஏறக்குறைய 194  பாடசாலைகளை மூடியிருக்கின்றோம். மாணவர்கள் இல்லாமையால் அந்தப் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணமென நாம் ஆராய்ந்த போது முதலாவது கிராமப்புறங்களிலிருந்து மாணவர்கள் நகர்ப்புறங்களை நோக்கிச் செல்கின்றார்கள், இரண்டாவது பிறப்பு விகிதம் குறைவு. எனவே, இந்த விடயங்கள் புலம்பெயர் சமூகத்தினராலும், இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினராலும் கணக்கில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் என நான் கருதுகின்றேன்.

நாங்கள் வாழவைக்க வேண்டுகின்ற இந்தச் சமூகம் , நாங்கள் வளமாக வாழவேண்டும் என்று நினைக்கின்ற மக்கள், இந்தப் பிரதேசம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நான் நினைக்கின்றேன். எனவேதான் நான் உங்களிடம் அன்பாகக் கேட்டுக்கொள்ளும் விடயம் வாழுகின்ற இந்தப்  பிரதேசம், வாழ வேண்டும் என்று விரும்புகின்ற மக்களை வாழவைக்க வேண்டிய வழிவகைகளை நீங்கள் செய்பவர்களாக இருக்க வேண்டும்.

இந்தச் சமூகத்திலேயே சில விடயங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக புள்ளி விபரங்கள் எங்களுக்குக் கூறுகின்றன. ஒன்று விவாகரத்து பெறுபவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகின்றது. இரண்டாவது  குழந்தை பேறு குறைந்து காணப்படுகின்றது.மூன்றாவது வயது சென்ற திருமணங்கள் அதிகரித்திருக்கின்றது. அதேபோன்று இன்னும் சில சமூகப் பிரச்சினைகள் இருக்கின்றன.

குடிபோதை, போதைவஸ்து, தற்கொலை போன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனவே, இவற்றையெல்லாம் கடந்து எமது சமூகம் வாழவேண்டும் என்றால் புலம்பெயர் சமூகம் ஆற்ற வேண்டிய பணி அதிகம் இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

எனவே, இந்தச் சமூகத்தை வாழ வைக்க நீங்கள் செய்யும் சிறிய பணியுடன் நின்றுவிடாது சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற உள நல பிரச்சினைகளுக்கு  தீர்வு காணவேண்டிய ஒரு காலம் இப்போது உங்கள் முன்னால் இருக்கின்றது.

வெறும் அரசியல்,  உரிமைசார் பிரச்சினைகள் மட்டும் எமக்கு இல்லை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். இளைய சமூகத்தினர் மத்தியில் – மாணவர்கள் மத்தியில் – குடும்பங்கள் மத்தியில் – சிறுவர்கள் மத்தியில் புரையோடிப் போயிருக்கும் சமூக உள நல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய தேவையும் அவசரமும் எங்களிடம் இருக்கின்றது. எனவே, அதை இன்று கூடியிருக்கும் புலம்பெயர் சமூகமும், இணைந்திருக்கும்  உள்ளூர் சமூகமும் உணர்ந்து செயற்பட வேண்டும்.” – என்றார்.

Share This Article