யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 28 பேர் மீதான தடை, பூர்வாங்க விசாரணைகளின் முடிவில் நீக்கப்பட்டது.
அடையாளப்படுத்தப்பட்ட மூன்று மாணவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன் அறிவித்துள்ளார்.
‘மாகோஸ்’ வார நிகழ்வில் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி மோதலில் முடிந்தது.
இதனையடுத்து சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும், விடுதி உட்பட பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.