தொல்பொருள் திணைக்களத்தின்  பணிப்பாளர் பதவி விலகலுக்கு காரணம் சொன்னார் அமைச்சர்!

editor 2

தொல்பொருள் திணைக்களத்தின்  பணிப்பாளர் பேராசிரியர் அநுர மனதுங்கவின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததன் அடிப்படையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாகவும், அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

தொல்பொருளியல் எனக் குறிப்பிட்டு அண்மைக்காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் வரலாற்று சான்றுகள் அழிக்கப்பட்டு வருவதோடு, காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் கடந்த வாரம் இலங்கை தமிழரசுக்கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன் போது தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளால் தொல்பொருளியல் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் தொடர்பில் ஆதரங்களுடன் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

விகாரைகளை அண்மித்த பகுதிகளில் தேவைக்கு அதிகமாக காணிகளை கையகப்படுத்துவதை நிறுத்துமாறும் , அரச காணிகளையோ அல்லது தனியார் காணிகளையோ ஆக்கிரமிப்பதற்கும் தொல்பொருளியல் திணைக்களத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் ஜனாதிபதி கடும் தொனியில் எச்சரித்திருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட சர்ச்சைக்குரிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்பாக ஊடகங்களிலும் , சமூக வலைத்தளங்களிலும் வெளியான காணொளிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையிலேயே பேராசிரியர் அநுர மனதுங்க தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்திருந்தார்.

இது தொடர்பில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வினவிய போதே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தொல்பொருளியல் தொடர்பில் வடக்கு , கிழக்கில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் எவ்வித தெளிவுபடுத்தல்களும் வழங்கப்படவில்லை. எனினும் புத்தசாசன , சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இது தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

தொல்பொருளியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகக் காணப்படுகின்றமையால் ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நியமனம் பெற்றிருந்தார்.

அதன் பின்னர் அவரது ஒப்பந்த காலம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய மீண்டும் பேராசிரியராக தனது பணிகளை ஆரம்பிக்க வேண்டுமென்பதால் தொல்பொருளியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டு அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார் என்றார்.

Share This Article