நல்லாட்சி காலத்தில் யாப்பாணத்தில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த காணிகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் நேற்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர். 33 ஆண்டுகளின் பின்னர் 40 பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 30 ஏக்கர் காணியும் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையுடன் இணைந்ததாக இராணுவத்தினரின் ஆயுதக் கிடங்கும் காணப்பட்டது. நல்லாட்சி காலத்தில் ஜே/233 கிராம அலுவலர் பிரிவான காங்கேசன்துறை மேற்குப் பகுதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆயுதக் கிடங்கு காரணமாக அதற்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட இராணுவ முகாம் அகற்றப்படவில்லை. மேற்படி காணி இதன் காரணமாக விடுவிக்கப்பட்டிருக்கவில்லை.
கடந்த மாதம் ஆயுதக் கிடங்கை இராணுவத்தினர் இடமாற்றியுள்ளனர். இதனையடுத்து அதன் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த முகாமிலிருந்து இராணுவத்தினர் நேற்று வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து, மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள சுமார் 30 ஏக்கர் காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இது தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகத்துக்கு எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்படவில்லை.