ஞாயிறு, வெள்ளிகளில் யாழில் தனியார் வகுப்புகளுக்குத் தடை!

editor 2

யாழ். மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஜுலை முதலாம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரனின் தலைமையில் இன்று கலந்துரையாடலொன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்டது.

பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளட தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.

இதில் சுகாதாரம், கல்வி, மதத் தலைவர்கள், பொலிஸ், தனியார் கல்வி நிலைய நிறுவனங்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில், ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் தரம் 9 வரையான மாணவர்களுக்கான பிரத்தியேக கல்வி நடவடிக்கை முற்றுமுழுதாக ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமை மாலையும் நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும், தனியார் கல்வி நிலையங்கள் சுகாதார வசதி, வகுப்பறை பிரமாணம் கட்டடங்கள் போன்றவற்றுக்கமைய அமைந்திருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிலையங்கள் உள்ளூராட்சி நிறுவனம், பிரதேச செயலகத்தில் பதிவு செய்தல் கட்டாயமாகும் என்றும் தனியார் கல்வி நிலையங்கள் 15 தொடக்கம் 30 நிமிடம் வரை ஆன்மிகம், சமூகம் சம்பந்தப்பட்ட விடயங்களை போதிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெறுதை அவதானிக்க பிரதேசமட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் குழுவொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இத் தீர்மானங்களை பின்பற்றாத தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article