தமிழகத்தின் முத்துப்பேட்டை கடலோரப் பகுதியில் 300 கிலோகிராம் கஞ்சாவை இலங்கைக்குக் கடத்த முயன்ற மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து கியூ பிரிவு பொலிஸார் முத்துப்பேட்டை துணை பொலிஸ் அதிகாரி தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை முத்துப்பேட்டை அருகே உள்ள அலையாத்தி காட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த மூவர் பொலிஸாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்ற போது உடனடியாகப் பொலிஸார் விரைந்து குறித்த மூவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அலையாத்தி காட்டில் 10 மூட்டைகளில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தைத் தொடர்ந்து பொலிஸார் அவர்களைக் கைது செய்து 10 மூட்டை கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் விசாரணையில் அவர்கள் முத்துப்பேட்டை அருகே பேட்டையைச் சேர்ந்த முருகானந்தம் (வயது 43), அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 25), கோவிலூரைச் சேர்ந்த சசிகுமார் (வயது 20) என்பதும், அவர்கள் இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்தாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் மொத்த எடை 300 கிலோகிராம் ஆகும். கைதான மூவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.