மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. ஆஜராகி வாக்குமூலம் வழங்கும் வரை அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தனது ருவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
“கொள்ளுப்பிட்டி பொலிஸார் எனது வீட்டுக்கு வந்து சிங்களத்தில் எழுத்துமூல ஆவணமொன்றை வழங்கினார்கள். என்னால் சிங்களத்தில் வாசிக்க முடியாது என்பதால் அதனை நான் ஏற்றுக்கொள்ள மறுத்தேன். அதன் பின்னர் சிங்களத்தில் அதனை வாசித்த அவர்கள் நான் அதற்குக் கட்டுப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மருதங்கேணி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நான் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கும் வரை நாட்டை விட்டு தடை விதிக்கக் கோரும் வேண்டுகோளை கிளிநொச்சி மாவட்ட நீதிவானிடம் பொலிஸார் விடுத்துள்ளனர்.
அதற்கமைய நான் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் வரை என்னை வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்க வேண்டாம் என நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.” – என்று கஜேந்திரகுமார் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.