3 தொடருந்துகள் மோதியதால் பாரிய விபத்து! இந்தியாவில் 233 பேர் மரணம்!

editor 2

இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல எக்ஸ்பிரஸ் தொடருந்து விபத்தில் சிக்கியதில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனனர்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை பயணித்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியது. அடுத்தடுத்து 3 தொடருந்துகள் மோதியதால் பாரிய விபத்து நிகழ்ந்துள்ளது.

சென்னை மத்திய தொடருந்து நிலையத்தில் இருந்து மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாருக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு-மேற்கு வங்காளம் இடையே இயக்கப்படும் அதிவேக தொடருந்துகளில் ஒன்றான இந்த தொடருந்துக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
இந்த தொடருந்து நேற்று மாலையில் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் தொடருந்து நிலையம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது.

அப்போது அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் தொடருந்து தடம்புரண்டு இருந்தது.

அதன் சில பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன.

இதனால் எதிர்பாராத விதமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த பெட்டிகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.

இதில் அந்த பெட்டிகள் மேலும் சேதம் அடைந்ததுடன், அதில் சிக்கியிருந்த பயணிகளின் நிலையும் மோசமானது.

இவ்வாறு 3 தொடருந்துகள் அடுத்தடுத்து மோதியதால் அந்த பகுதி முழுவதுமே அதிர்ந்தது. சில நிமிடங்களுக்குள் அரங்கேறிய இந்த விபத்தால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

Share This Article