“ஆசியாவை பிளவுபடுத்த இடமளிக்க மாட்டோம் என உலகத்தின் முன் துணிச்சலாக அறிவித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் ஜனாதிபதியாகச் செயற்படுவது முழு ஆசியாவுக்கும் விசேட பாதுகாப்பு.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஜப்பானில் நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது இது தொடர்பான நிலைப்பாட்டை ஜனாதிபதி அறிவித்தார் எனவும், ஜனாதிபதியிடம் தெளிவான வெளிவிவகாரக் கொள்கை உள்ளது என்பதற்கு இது சான்று எனவும் வஜிர குறிப்பிட்டார்.
மேலும், இலங்கை மீதான ஜப்பானின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதோடு, ஜப்பான் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து இலங்கை தொடர்பில் ஜப்பானில் நிலவும் அவநம்பிக்கை மற்றும் சந்தேகங்களை நீக்குவதற்கும் தெளிவற்ற சூழ்நிலைகளைக் களைவதற்கும் ஜனாதிபதியின் விஜயம் உதவியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.