2012 – 2014 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் 2015ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில் வடக்கிலுள்ள இரு அதிகாரிகளுக்கு குற்றச்சாட்டுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டு 2015ஆம் ஆண்டு ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. அது தொடர்பில் அப்போதைய வடக்கு மாகாண பிரதம செயலர் அ.பத்திநாதனாலும், அப்போதைய ஆளுநராலும் விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் 2018ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டிருந்தன.
விசாரணை அறிக்கைகள் நிர்வாக அதிகாரிகளின் நியமன அதிகாரியான உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது குற்றப் பத்திரம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக வடக்கு மாகாண பிரதம செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விளக்கம் கோரப்பட்டுள்ளது.
அப்போதைய யாழ். மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் அப்போதைய வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுப் பத்திரமே தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சிலிருந்து நேரடியாக இருவருக்கும் ‘முற்கூட்டிய’ தகவலாக ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வடக்கு மாகாண பிரதம செயலர் ஊடாக அப்போதைய உள்ளூராட்சி ஆணையாளராக இருந்தவருக்கு மாத்திரம் உத்தியோகபூர்வமாக விளக்கம் கோரிய குற்றப் பத்திரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் 14 நாள்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.