தையிட்டியில் மீண்டும் போராட்டத்தில் குதித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

editor 2

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையை அகற்ற வலியுறுத்தி நேற்று முதல் மீண்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

தமிழ் மக்களுக்கு சொந்தமான இந்தக்காணியை விடுவிக்க வலியுறுத்தியும் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவரும் எம். பியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் பங்கேற்றுள்ளார்.

வெசாக் தினத்தை முன்னிட்டு கடந்த மே 4ஆம் திகத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விகாரையை அகற்றக் கோரி போராட்டம் நடத்தியது.

இதன் பின்னர், கடந்த மே 23ஆம் திகதி முதல் நான்கு நாட்கள் பகல் – இரவு என தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னணியினர் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மூன்றாவது கட்ட மாக நேற்றைய தினம் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பொசன் போயாதினம் வரும் சனிக்கிழமை வருகிறது.
இதையொட்டி நடைபெறும் பூசையை தடுக்கும் நோக்கிலேயே இந்தப் போராட்டம் நடைபெற்றது.

விகாரைக்கு செல்லும் வழிகள் மறிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், முன்னணியின் எம். பிக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட வாக்குவாதத்தின் பின்னர், பொலிஸரின் கட்டளையை மீறி எம். பிக்களும் போராட்டக்காரர்களும் விகாரையின் முன்புறமாகவுள்ள காணிக்கு சென்று அங்கிருந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

நேற்றிரவும் தொடர்ந்த போராட்டம் நாளை மறுதினம் வரை தொடரும் என்று அறிய வருகின்றது.

Share This Article