வாக்குறுதிகளை மீறி இலங்கை அரசாங்கம் செயற்படுகிறது – மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு!

editor 2

பயங்கரவாத தடைச் சட்டத்தைக் கைவிடுவதாக பல்வேறு தரப்புகளுக்கு தொடர்ச்சியாக உறுதியளித்துள்ளபோதிலும் இலங்கை அரசு மீண்டும் மீண்டும் அதனைப் பயன்படுத்துகின்றமை குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை தனது கவலைகளை வெளியிட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச்சபை விடுத் துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் நியாயமற்ற முறையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் சிறுபான்மையினத்தவர்களை இலக்கு வைத்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘பயங்கரவாதத் தடைச் சட்டம் தன்னிச்சையான கைதுகள் மற்றும் விசாரணையின்றி நீண்டகாலக் காவலில் வைத்தல் ஆகியவற்றுக்கு உதவுகிறது.

சித்திரவதை மற்றும் வற்புறுத்தலின் கீழ் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவது உட்பட எந்தவிதமான நியாயமான அல்லது உரிய செயல்முறை பாதுகாப்புகள் இல்லாமல், சிறுபான்மையினரை குறிவைக்க இந்த சட்டம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது’ என்று சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

‘இந்த அரசாங்கம் ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வரஎதிர்பார்க்கும் சூழலில், இது கவலையளிக்கும் முன்னேற்றங்கள் ஆகும். இது பயங்கரவாதச் செயலின் வரையறையை மேலும் விரிவுபடுத்த முயல்கிறது’ என்று மன்னிப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் அல்லது நம்பகமான சான்றுகள் இருந்தால், நியாயமான விசாரணைத் தரங்களைப் பயன்படுத்தி உடனடியாக அவர்கள் மீது குற்றச்சாட்டுப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Share This Article