நெடுங்கேணியில் சிறுமியை வன்புணர்ந்த சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

editor 2

சிறுமி ஒருவரை வன்புணர்ந்த குற்றத்துக்காக படை சிப்பாய் ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதி மன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

கடந்த, 2013 மே 14ஆம் திகதி வவுனியா – நெடுங்கேணியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார் என்று பொலிஸில் முறைப் பாடு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப் பாட்டின் அடிப் படையில் அந்தப் பகுதி இராணுவ முகாமில் பணி யாற்றிய இராமச்சந்திர ஆரியரட்ண என்ற சிப்பாய் கைது செய்யப்பட்டார். அவர் கடமையிலிருந்தபோது சம்பவம் இடம் பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்தது.

சந்தேக நபருக்கு எதிராக வவுனியா நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணை இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து எதிரிக்கு எதிராக சட்ட மா அதிபரால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம் பெற்று நேற்றைய தினம் தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.

நேற்றைய விசாரணை முடிவில், ‘சிவில், பொலிஸ் சாட்சியங்கள் மற்றும் நிபுணத்துவ சாட்சியங்களின் அடிப்படையில் வழக்குத் தொடுநர் எதிரி மீதான குற்றச்சாட்டுக்களை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபித்துள்ளார்.

இரண்டு குற்றச்சாட்டுகளில் எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டார்’, என்று மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

‘சிறுமியை பாதுகாவலரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து அழைத்துச் சென்றார் என்று எதிரிமீதான முதலாவது குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற எதிரி மீதான இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை எதிரி வழங்க வேண்டும் என்பதுடன், 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும். செலுத்தத் தவறின் ஒரு வருடசாதாரண சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்’ என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

Share This Article