“நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இன்னமும் அரசமைப்புத் தெரியவில்லை. ஜனாதிபதியிடம் அவர் முன்மொழிந்த இடைக்கால நிர்வாக சபை யோசனையிலிருந்தே அது வெளிப்படையாகத் தெரிகின்றது.”
– இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுக்களின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஓர் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிர்வாகங்களை நடத்துவதற்கு இடைக்கால நிர்வாக சபை அமைக்கும் யோசனை அதில் முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே தவராசா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசமைப்பின் 154 ’எல்’ பிரிவில் இடைக்கால நிர்வாக சபை தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாகாண சபை நிர்வாகத்தை அரசமைப்புக்கு இயைவாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கருதினால் மாத்திரமே அவ்வாறானதொரு இடைக்கால நிர்வாக சபைக்கான அனுமதியை நாடாளுமன்றில் பெற்று நடைமுறைப்படுத்தலாம்.
போர்க்காலங்களில் கூட அவ்வாறானதொரு ஏற்பாடு நடைமுறையில் இருக்கவில்லை. இப்போது மாகாண நிர்வாகம் அரசமைப்புக்கு ஒத்திசைவாக நடக்கின்றது. அப்படியிருக்கையில் இடைக்கால நிர்வாக சபையை எப்படி அமைக்கலாம்?
நீதியரசராக இருந்தவர் விக்னேஸ்வரன். அவருக்குச் சட்டம் தெரியும் என்றுதான் முதலமைச்சராக்கினார்கள். ஆனால், முதலமைச்சராகிய சில மாதங்களிலேயே அப்போதைய பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸால், முதலமைச்சரின் சுற்றறிக்கைக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. பின்னர் அந்தச் சுற்றறிக்கையை மீளப்பெற்றார் விக்னேஸ்வரன். அவர் அரசமைப்புத் தெரியாமல் முதலமைச்சராகப் பணியாற்றினார். அந்தப் பதவியிலிருந்து விலகிய பின்னரும் அரசமைப்புத் தெரியாமல் இருக்கின்றார். முதலில் அரசமைப்பைப் படித்து தெளிவு பெற்ற பின்னர் அவர் செயற்பட்டால் நல்லது.” – என்றார்.