திருகோணமலை மாநகர சபையின் முதல்வராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் அரசுக் கட்சி அறிவித்துள்ளது.
திருகோணமலை தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த முடிவை பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட குழு தலைவருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
சபைக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு குறித்த தெரிவானது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை முதலாவது மாநகர சபைக்காக தமிழ் அரசுக் கட்சி சார்பில் 9 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பாக 4 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் சார்பாக தலா 1 உறுப்பினர்களுமாக மொத்தமாக 25 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு ஆட்சியமைப்பதற்கு 13 உறுப்பினர்கள் தேவைப்படுகின்ற நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கவுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் ஆதரவளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.