14 ஆவது தேசிய படைவீரர் தின நிகழ்வு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள படைவீரர்களை நினைவுகூர்வதற்கான சதுக்கத்தில் நடைபெற்றது.
போரை இராணுவத்தினர் வெற்றிகொண்டு 14 வருடங்கள் பூர்த்தியாவதையொட்டி இந்த நிகழ்வு நேற்று நடத்தப்பட்டது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
எனினும், இந்தப் போர் வெற்றி விழாவில் முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. ராஜபக்ச குடும்பத்தில் இருந்து எவருமே கலந்துகொள்ளவில்லை
இந்நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் உள்ளிட்ட அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி சவேந்திர சில்வா தலைமையிலான முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட முன்னாள் முப்படைகளின் தளபதிகள், இராணுவத்தினர் மற்றும் இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.