இந்தியாவின், தமிழ்நாட்டில் பல்வேறு நபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நபரொருவர் கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு தப்பி வர முயன்ற போது நாகப்பட்டினம் துறைமுகத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தமிழ்நாட்டில் பல்வேறு நபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக இந்திய பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பின்னர் இது தொடர்பில் இந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர் தலைமறைவாக இருந்துள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு தப்பி வர முயன்ற போது நாகப்பட்டினம் துறைமுகத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் சுங்க அதிகாரிகள் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நாகப்பட்டினம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.