தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயல்பட ரெலோ தலைவர் விருப்பம் தெரிவித்துள்ளார். புளொட், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்பட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயல்பட்ட கட்சிகளை மீண்டும் செயல்பட வருமாறு கோரிக்கை விடுக்கிறோம் – இவ்வாறு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்
பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நல்லூரிலுள்ள தனது பணிமனையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், தனிமனித தீர்மானம் எடுக்கும் கட்சியாக நாங்கள் இல்லை. தலைவர் என்ற முறையில் நான் இதனை தெளிவாக சொல்கிறேன். முன்பு அவ்வாறான நிலைமை இருந்திருக்கலாம்.
ஆனால், தற்போது அவ்வாறில்லை. ஆகக்குறைந்தது தலைவர், செயலாளராவது கலந்துபேசி எல்லா விடயங்களிலும் இணைந்துதான் செயல் படுகிறோம். ஆகவே,
தனி மனித தீர்மானம் என்ற பேச்சு அபாண்டமானது. வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான சபைகளை கைப்பற்றி – ஆட்சி அமைப்பதற்கு முதல் நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி இருக்கிறது. அவ்வாறு எமக்கு வாக்களித்து எம்மை அங்கீகரித்து – ஏற்றுக்கொண்ட எமக்கு ஊக்கமளித்த – தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற அனைவருக்கும் வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் எல்லோருக்கும் கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் மீண்டெழுவதற்கான வாய்ப்பைத் தந்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி கூறுகின்றோம். மிகக் கேவலமாக தேர்தல் காலத்தில் எங்களை எதிர்த்து போட்டியிட்டு இல்லாதவற்றை சொல்லி, தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடியவர்கள் இப்போது நாங்கள் தேசிய மக்கள் கட்சியோடு ‘டீல்’ பேசுகிறோம் என்று பொறுப்புள்ளவர்களே குறிப்பிட்டு பேசுகிறார்கள். தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் என்ற முறையில் பொறுப்போடு இதனை நான் மறுதலிக்கிறேன்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து ஆட்சி அமைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எந்த டீலையும் செய்யவில்லை.
இந்த பரப்புரைகள் வேலை செய்யாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர் நளிந்த ஜயதிஸ்ஸகூட தங்களை தமிழ் கட்சிகள் அணுகவில்லை என்பதை கூறியிருக்கிறார். அடுத்த கட்ட செயல்பாடுகளை ஆராய்வதற்காக (இன்று) சனிக்கிழமை அரசியல் குழு கூடி, எந்தெந்த சபைகளில் எவ்வாறு செயல்படுவது, யார் யாரை முன்னிலைப்படுத்தி தவிசாளர், முதல்வரை தீர்மானிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம்.
ரெலோ, புளோட் கட்சிகளின் தலைவர்கள் எங்கள் கட்சியின் பதில் பொதுச் செயலாளருடன் பேசியுள்ளார்கள்.
செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயல்பட விருப்பம்
தெரிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உட்பட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயல்பட்ட கட்சிகள் மீண்டும் செயல்பட முன்வர வேண்டும் – என்றார்.