இலவச மருத்துவம் என்ற மக்களின் உரிமையைக் கூட தற்போதைய அரசாங்கம் மீறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு – பல்லன்சேன பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர், சுகாதாரம் என்பது வெறுமனே சேவையல்ல எனவும் அது மனித உரிமையும், அடிப்படை உரிமையுமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லை.
இலவச மருத்துவ சேவை காணப்படும் வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாமையினால் உயிர்காக்கும் மருந்துகளைக் கூட தனியார் மருந்தகங்களில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று நாட்டு மக்களின் வருமான மூலங்கள் வீழ்ச்சியடைந்து, வாழ்வாதாரங்கள் வீழ்ச்சியடைந்து, வருமானம் கூட குறைந்துள்ள இந்த வேளையில், பொருட்களின் விலைகளும், வாழ்க்கைச் செலவுகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன.
வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள் தமது பிள்ளைகளுக்குக் கல்வியை வழங்கக்கூட முடியாத நிலை உருவாகி வருகிறது.
ஜே.வி.பி தேர்தல் காலத்தில் நல்ல வருமானத்தைப் பெற்றுத் தந்து, பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வோம் என வாக்குறுதி அளித்தது.
எனினும், இன்று வறுமை அதிகரித்து வருகின்றது. மேடைகளில் மக்களுக்காக கோஷங்கள் எழுப்பினாலும், ஆட்சிக்கு வந்த பின்னர் அதன் பிரகாரம் செயல்படத் தவறியுள்ளனர் எனவும் வெறும் பேச்சு, பொய்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.