முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் தேசிய கிரிக்கெட் மைதானம் ஒன்று அமையப்பெறுகின்றதென மாவட்ட துடுப்பாட்ட சங்க தலைவர் வைத்தியர் கற்கண்டு உதயசீலன் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டம் என்பது மிகவும் பின்தங்கிய ,போரால் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம், இந்த மாவட்டத்தில் சகல தரப்புக்களின் ஒத்துழைப்போடும் தேசிய தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம் இலங்கை துடுப்பாட்ட சங்கத்தினால் அமைக்கப்படுகின்றது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் , இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பிலும் பேச்சு வார்த்தைகளை நடாத்தியிருந்தோம்.
இராணுவ பாவனையில் இருந்து விடுவிக்கப்பட்ட இடமாக மைதானம் அமைப்பதற்கான உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதி காணப்படுவதால் புனரமைப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேளையில்,
அதன் அடுத்த கட்டமாக அவர்கள் குறித்த மைதான வளாகத்தை பார்வையிடுவதற்காக எதிர்வரும் மாத்தில் வருகைதர உள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமையப்பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் உழைததுக்கொண்டிருக்கின்றோம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் துடுப்பாட்டங்களில் ஈடுபடுவதற்காகவும், துடுப்பாட்ட பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ,துடுப்பாட்டத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் குறித்த மைதானம் அமையப்பெற இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த மைதான நிர்மாணத்திற்கு அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டி நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த காணிகள் இராணுவத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் அதில் முதியோர் இல்லம் அமைத்தல் உட்டபட்ட பல்வேறு முயற்சிகள் அரச திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் மாவட்ட துடுப்பாட்ட சங்க தலைவர் வைத்தியர் கற்கண்டு உதயசீலனின் தனிப்பட்ட தொடர் முயற்சியால் தேசிய மைதானம் அமைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது..
குறித்த காணி புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிவநகர் பகுதியில் அமையவுள்ளது. ஆனந்தபுரத்தின் ஒரு பகுதியாக காணப்பட்ட குறித்த பகுதி, 90 களில் சிவநகர் என்ற கிராம அலுவலர் பிரிவில் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.