வவுனியா, குருமண்காட்டு சந்தியில் வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரிய சாரதியினை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்ற முற்பட்டமையினால் அவ்விடத்தில் பதற்ற நிலமை காணப்பட்டது.
சனிக்கிழமை (12) இடம்பெற்ற இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வாகன சாரதி ஒருவர் வர்த்தக நோக்கத்திற்காக குருமண்காடு சந்தியில் வாகனத்தினை நிறுத்தியுள்ளார். இதன்போது வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை இறக்குவதினால் சிறிது நேரம் கால அவகாசம் தருமாறு வாகன சாரதி கோரிய சமயத்தில் போக்குவரத்து பொலிஸார் வாகன திறப்பினை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது வாகனத்தினை நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தினை நிறுத்தியமை என சிங்கள மொழியில் பொலிஸார் தண்டப்பத்திரம் வழங்கிய சமயத்தில் தமக்கு என்ன குற்றம் என தெளிவில்லை. எனவே, தமிழ் மொழியில் தண்டப்பத்திரம் கோரியமையினால் வாகன சாரதி – போக்குவரத்து பொலிஸாருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி கடமைக்கு இடையூறு என தெரிவித்து குறித்த வாகன சாரதியினை முச்சக்கர வண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச்செல்ல முற்பட்ட சமயத்தில் அவ்விடத்தில் பதற்ற நிலமை ஏற்பட்டது.
எந்த தவறும் செய்யாது என்னை எவ்வாறு கைது செய்ய முடியும். மேலும் அவ்வாறு தவறு செய்தால் தண்டப்பத்திரம் தானே வழங்க வேண்டும் என வாகன சாரதி கூறி, முச்சக்கர வண்டியில் ஏற மறுப்பு தெரிவித்தமையடுத்து போக்குவரத்து பொலிஸார் குறித்த வாகன சாரதியின் தலையை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு ஏற்றிச் சென்றனர்.
வாகன சாரதி மீது வவுனியா போக்குவரத்து பொலிஸார் வழக்கு தாக்கல் மேற்கொண்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.