இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர தீர்வை வரி குறித்து அமெரிக்காவின் வர்த்தக துறை பிரதிநிதிகளுடன் சுமுகமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.கிடைக்கப்பெற்றுள்ள 90 நாட்களை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வோமென தொழில் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை குறித்து விரிவாக பேசப்பட்டது. பல யோசனைகளை முன்வைத்துள்ளனர். அவற்றை முழுமையாக பரசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 44 சதவீத பரஸ்பர தீர்வை வரி குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அமெரிக்காவின் வர்த்தக துறை பிரதிநிதிகளுடன் இரண்டு முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள்.
வரி விவகாரத்தில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதற்கு மாறாக நிதி அமைச்சு சார்பில் அமெரிக்காவின் வர்த்தக துறைக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே கிடைக்கப் பெற்றுள்ள 90 நாட்களை சிறந்த முறையில் பயன்படுத்திற் கொள்ளும். குறித்த வரி விதிப்பில் இலங்கைக்கு நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.