வெற்றிடமாகவுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விரைவில் அதிபர் நியமனம்!

editor 2

வெற்றிடமாகவுள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான அதிபர் நியமனங்கள் உரிய முறைமையை பின்பற்றி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது அமில பிரசாத் எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கம் பாடசாலை அதிபர்களை நியமிக்கும் நடவடிக்கைகளில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது. எந்த ஒரு முறைமையையும் பின்பற்றாமல் பதில் அதிபர்களை நியமித்திருந்தது. அதனால் அவர்களுக்கும் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த விடயத்தில் தேவையற்ற பிரச்சினையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த தவறை தற்போதைய அரசாங்கம் நிவர்த்தி செய்து வருகிறது. உரிய முறையை பின்பற்றி தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு இணங்க அதிபர்களாக பதவி வகிக்க தகுதியுள்ளவர்களுக்கு அவர்களது கல்வித் தகைமைக்கு அமைய நேர்முக பரீட்சை நடத்தப்பட்டு நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க அதிபர் வெற்றிடம் காணப்படும் தேசிய பாடசாலைகளுக்கும் அதிபர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தை போன்று இந்த நடவடிக்கைகளை நெருக்கடிக்கு உள்ளாக்காமல் அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரே விதமான நடைமுறையை பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த வகையில் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கென வேறு வேறு நடைமுறைகளை பின்பற்றாமல் அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரே விதமான முறைமையையே பின்பற்றி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் என்றார்.

Share This Article