இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நாங்கள் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் நாட்டுக்கும் மக்களும் பாரிய நன்மை கிடைத்திருக்கிறது. மாறாக நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும், இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படக்கூடி எந்த விடயங்களும் உடன்படிக்கையில் இல்லை. அதேநேரம் அமைச்சரவையினதும் சட்டமா அதிபரதும் அனுமதியை பெற்றுக்கொண்டே இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளோம். அதனால் இந்த உடன்படிக்கைகள் சட்ட பூர்வமானதாகும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இருநாடுகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட 7 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் தொடர்பில் அமைச்சரவை கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பை ஏற்று கடந்த டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதியும் நானும் எமது அமைச்சர்களும் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தோம். அதன்போது நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் கடந்த 4ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவருடன் வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட இந்திய தூதுக்குழுவினரும் வருகை தந்திருந்தனர்.
இதன்போது இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதுடன், இவ்வேளையில் இருநாடுகளுக்கும் இடையே சுற்றுலாத்துறை, டிஜிட்டல் மயமாக்கல் , அரசியல் தொடர்புகள், வலுச் சக்தி, விவசாயம், முதலீடு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதகமான விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன. இந்த பயணத்தில் இலங்கையர்களுக்கு பல்வேறு நன்மைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பிரதானமாக நாங்கள் இந்தியாவிடம் கடந்த காலங்களில் இருதரப்பு கடனை பெற்றுள்ளோம். இது தொடர்பில் எமது பக்கத்தில் மறுசீரமைப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தோம். இந்தியா அரசாங்கம் அதற்கு இணங்கியது. இதன்படி இருதரப்பு கடனை மறுசீரமைக்க உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. அத்துடன் முன்னர் கடனாக பெற்றுக்கொண்டவற்றில் 100 மில்லியன் டொலரை 6 மாதங்களுக்கு மாத்திரம் நன்கொடையாக மாற்றப்பட்டுள்ளது.
இதேவேளை மக்களுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் வகையில், வைத்தியசாலைகள், வணக்கஸ்தளங்களுக்கு உதவித் திட்டங்கள் பலவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இருநாடுகளுக்கும் இடையில் சமூக பாதுகாப்பு உடன்படிக்கையை நிறைவு செய்யவும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியாவில் 1500 இலங்கை அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் இலவச பயிற்சிகளை வழங்குவதற்கு இணக்கப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய 33 வேலைத்திட்டங்களுக்கான 240 கோடி ரூபா நிதி உதவியை வழங்க புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது.
அதேபோன்று நாட்டில் நீர்வழங்கல், பெருந்தெருக்கல் தொடர்பான திட்டங்களும், தோட்டப்புற வீடமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் நிதி உதவிகள் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமரின் வருகையுடன் கிடைத்த நன்மைகளை நாட்டு மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளை உயர்த்துவதற்காக பயன்படுத்துவது எங்களின் பொறுப்பாகும்.
இந்த விஜயத்தின் போது இரண்டு அரசாங்கங்களும் 7 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டோம். இருநாடுகளின் அமைச்சுக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே விரிவான பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியே அந்த உடன்படிக்கைகளை செய்துள்ளோம்.
இந்த பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளுக்கமைய குறித்த உடன்வடிக்கைகளை சட்டமா அதிபருக்கு அனுப்பி அவரின் அனுமதியை பெற்றுள்ளோம். இதனால் இந்த ஆவணங்கள் எதுவும் சட்டவிரோதமானவை அல்ல. இவை அனைத்தும் இலங்கை சட்டமா அதிபரால் அனுமதி வழங்கப்பட்ட உடன்படிக்கைகளாகும்.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைளானது இருநாடுகளுக்கும் இடையே சட்டப்பூர்வமான இணைப்புக்கும் அப்பால் இருநாடுகளுக்கும் இடையே நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வுக்கான விரிவான இணைப்பை ஏற்படுத்துவதற்கானது மட்டுமே ஆகும்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரண்டு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு. மூன்று மாதங்களுக்கு முன்னர் அறிவித்து அந்த உடன்படிக்கைகளில் இருந்து விலக முடியும். 3 வருடங்கள், 5 வருடங்களுக்கு செல்லுபடியாகக்கூடிய உடன்படிக்கைகளும் உள்ளன.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகள் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டு அமைச்சரவையின் அனுமதியுடன், சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டும் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான ஒவ்வொரு அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு அந்த அமைச்சுகளின் அனுமதிகளுடனேயே இந்த உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்பட்டுள்ளன. இதனை விடுத்து அமைச்சரவையில் காண்பிக்காது இதனை செய்யவில்லை.
இந்த உடன்படிக்கையில் வலுச் சக்தி தொடர்பில் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. அவற்றில் ஒன்று மன்னாரில் இருந்து இந்தியாவின் மதுரை வரையில் எமது மின் கட்டமைப்பின் கிரிட் இணைப்பை ஏற்படுத்துவது தொடர்பானது.
இதன்மூலம் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தன்னிரைவு பெற்ற பின்னர் மேலதிக மின்சாரத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யவும், பிம்ஸ்டெக் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியும். அதேபோன்று இந்தியாவில் இருந்தும் இலங்கைக்கு மின்சாரத்தை இறக்குமதி செய்ய முடியும்.
இதன்படி ஏற்றுமதி, இறக்குமதியை அடிப்படையாகக் கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையாகும். இதனை பூர்த்தி செய்ய இன்னும் செய்ய வேண்டிய பல விடயங்கள் உள்ளன. இது கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவிப்பது மட்டுமே ஆகும். இதன்பின்னரே எவ்வாறு நிர்மாணப்பணிகளை முன்னெடுப்பது போன்ற தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும்.
ஆனால் இந்தியாவில் இருந்து கட்டாயம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அவ்வாறான நிபந்தனைகள் எதுவும் கிடையாது. இந்தியாவினால் சுவிட்சை நிறுத்தினால் எமது நாடு இருளாகும் என்ற எதுவும் கிடையாது. எமது இறையாண்மையை காட்டிக்கொடுக்கும் எந்தவொரு விடயம் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக இடம்பெறாது. அவ்வாறு இருந்தவற்றை திருத்தியே நாங்கள் உடன்படிக்கையை செய்துள்ளோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வலுச்சக்தியில் எமது நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுக்கப் போவதில்லை என்பதனை கூறிக்கொள்கிறோம்.
அடுத்ததாக திருகோணமாலையை வலுச்சக்தியின் கேந்திரமாக மாற்றுவதற்கான உடன்படிக்கையாகும். இது இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய மூன்று நாடுகள் தொடர்புடைய உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையில் எவ்விடத்திலும் எரிபொருள், எரிவாயுவை கொண்டுவரும் முறை தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை. அது கலந்துரையாடலுக்கு விடப்பட்டுள்ளது.
அத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக பயிற்சிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் போன்ற தகவல்கள் பகிர்ந்துகொள்ள இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வலயத்திற்குள் ஆட் கடத்தல்கள், போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்ளல் போன்றவையும் இதில் இடம்பெறும். இதனை தவிர இந்தியாவுடன் பாதுகாப்பு தொடர்பான இணக்கப்பாடுகள் கிடையாது.
எமது பூமியை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பயன்படுத்த முடியாது. இதனை இந்தியாவுக்கு மட்டுமன்றி சீனாவுக்கும் கூறியுள்ளோம். இந்த உடன்படிக்கைகளை சட்டமா அதிபருக்கு அனுப்பியும், பாதுகாப்பு தரப்பினருக்கு அனுப்பியும் தேவையான திருத்தங்களை மேற்கொண்டும் அவர்களின் அனுமதியுடனேயே இதனை செய்துள்ளோம். இதனுடாக எமது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதுமில்லை.
இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை நாங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையான வகையிலேயே பயன்படுத்துவோம். இதில் காட்டிக்கொடுப்புகள் எதுவும் கிடையாது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
இதேவேளை இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து பாராளுமன்றத்தின் அனுமதியுடனேயே செய்திருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறிய நிலையில், அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், அவ்வாறு பாராளுமன்றத்தில் அனுமதி பெற வேண்யடிய வேறு உடன்படிக்கைகள் உள்ளன என்றும், அவை இந்த உடன்படிக்கைகள் அல்ல என்றும் தெரிவித்தார்.