ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

editor 2

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை தவிர்த்து ஏனைய வேட்பாளர்களை எவ்விதமான அடிப்படைகளுமில்லாமல் ஊழல்வாதிகள் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது பிரதிவாதிகளுக்கு இழைக்கும் அநீதியாகும். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிடுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தமது சுயாதீன அதிகாரத்துக்கமைய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் புதன்கிழமை (02) முறைப்பாடளித்ததன் பின்னர் ஐக்கிய குடியரசு முன்னணியின் உப தலைவரான தீக்ஷன கம்மன்பில குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வெலிகம பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் ‘ஊழல், மோசடியற்ற குழுவினர் வெற்றிப் பெறும் பிரதேச சபைகளுக்கு மாத்திரமே, மத்திய அரசாங்கத்தினால் மானியங்கள் ஒதுக்கப்படும். அவ்வாற குழு தேசிய மக்கள் சக்தியிடமே உள்ளது’என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஜனாதிபதி தனது அதிகாரத்தை நேரடியாக பயன்படுத்தி மத்திய அரசாங்கத்தால் மானியங்கள் வழங்குவது குறித்து தீர்மானிப்பது தேர்தலுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் ஒரு செயற்பாடாகும் .

உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் அபிவிருத்திகள் குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சு மற்றும் உரிய உள்ளூராட்சிமன்றங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் தீர்மானம் எடுக்க வேண்டும்.

ஜனாதிபதியின் கூற்றில் அரச அதிகாரிகள் தமது அரசியல் நோக்கங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படுவது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை தவிர்த்து ஏனைய வேட்பாளர்களை எவ்விதமான அடிப்படைகளுமில்லாமல் ஊழல்வாதிகள் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது பிரதிவாதிகளுக்கு இழைக்கும் அநீதியாகும்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிடுவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தமது சுயாதீன அதிகாரத்துக்கமைய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறித்த முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளோம். பிரதேச சபை அபிவிருத்திக்கு நிதி ஒதுக்க வேண்டுமாயின் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இது முறையற்றதாகும். சுதந்திரமான முறையில் தமது வேட்பாளரை தெரிவு செய்யும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை தவிர்த்து ஏனைய உறுப்பினர்களை ஊழல்வாதிகள் என்று குறிப்பிடுவது முறையற்றது.

சகல வேட்பாளர்களின் கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருத்தல் வேண்டும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

Share This Article