உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும், விடுதலை புலிகளாலும், புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள் இடம்பெற்றன. இவை பொய்யல்ல. போர் ஒன்றின்போது அவ்வாறு (மனித உரிமைகள், விதிகள் மீறல்) இடம்பெறும். இது குறித்து உள்நாட்டில் உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்
“மாகாண சபை முறைமை குறித்து இந்தியா எமக்குக் கூற வேண்டிய அவசியம் கிடையாது. எனினும், நாம் உறுதியளித்தபடி மாகாண சபை தேர்தலை நடத்துவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) தனியார் விடுதி ஒன்றில் சந்தித்த வேளை ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும் விடுதலை புலிகளாலும் புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட பல அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள் இடம்பெற்றன. இவை பொய்யல்ல. போர் ஒன்றின்போது அவ்வாறு ( மனித உரிமைகள், விதிகள் மீறல்) இடம்பெறும். இது தொடர்பில் உள்நாட்டில் உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
சில நாடுகளால் விதிக்கப்படும் தடைகளால் இந்தப் பிரச்னையை தீர்க்க முடியும் என நான் நினைக்கவில்லை. இதனால் நாட்டில் உள்ள இனவாதிகளுக்கே சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தருவது நல்ல விடயமாகும்.
அவர் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
திருகோணமலையில் சூரிய மின் திட்டம், வடக்கு ரயில் பாதைக்குரிய சமிக்ஞைகள் பொருத்தப்படுதல் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்காகவே அவர் வருகை தரவுள்ளார்.
மாகாண சபை முறைமை என்பது உள்நாட்டுப் பிரச்னையாகும். அதனை இந்தியா எமக்குக்கூற வேண்டிய அவசியம் கிடையாது.
மாகாண சபை முறைமையை நடைமுறைப்படுத்துவோம் என நாம் எமது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்தவுடன் பெரும்பாலும் இந்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கிறோம். நாம் ஏற்கனவே மக்களுக்கு உறுதியளித்துள்ளோம்.
ஆகையால், அதனை இந்தியாவுடன் கலந்துரையாட வேண்டிய தேவை கிடையாது. நான் அறிந்த வரையில் 13ஆவது திருத்தம் தொடர்பில் எமது ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையே நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை – என்றும் கூறினார்.