உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன. நியாயமானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை நடத்துவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தல் சட்டங்களுக்கு முரணாக செயற்படும் தரப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி ஒவ்வொரு மாவட்ட செயலகங்களுக்கும் விநியோகிக்கப்படும்.
இதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறும்.
22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் வாக்களிக்க தவறும் அரச உத்தியோகஸ்த்தர்கள் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ள அனைத்து அரச உத்தியோகஸ்த்தர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க, தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் சகல உள்ளூராட்சி மன்றத் அதிகார சபைகளில் உள்ள மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பின் அளவு ஆகிய அடிப்படை காரணிகளை கருத்திற் கொண்டு வேட்பாளர் ஒருவர் வாக்காளர் ஒருவருக்கு செலவு செய்ய கூடிய தேர்தல் பிரசார செலவு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறைந்த தொகையாக மன்னார் பிரதேச சபைக்கு 74 ரூபாய், கூடிய தொகையாக லாஹூகல பிரதேச சபைக்கு 164 ரூபாய் என்ற அடிப்படையில் தேர்தல் பிரசாரத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரதேச சபைக்கும் ஒதுக்கப்படும் செலவுத் தொகையில் 50 சதவீதத்தை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செலவழிக்க வேண்டும், 30 சதவீதத்தை அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழு செலவழிக்க வேண்டும், 20 சதவீதத்தை மேலதிக பட்டியலில் உள்ள வேட்பாளர் செலவழிக்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் தேர்தல் பிரச்சார செலவினத் தொகையை சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆகவே உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தமது செலவினத் தொகை தொடர்பான குறிப்புக்களை வைத்துக்கொள்ள வேண்டும். சரியான ஆவணங்களுடன் விபரங்களை சமர்க்கிப்ப வேண்டும்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் நிறைவடைந்துள்ளன.
நியாயமானதும், சுதந்திரமானதுமான வகையில் தேர்தலை நடத்துவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்தல் சட்டங்களுக்கு முரணாக செயற்படும் தரப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.