எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தொழிலாளர் கட்சி, ஐக்கிய தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெவ்வேறு மாவட்டங்களில் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.துரைராசா, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் முன்னிலையாகியிருந்தார்.
குறித்த வழக்கு விசாரணையின் போது சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி, இது சம்பந்தமாக சுமூகமான முடிவுக்கு வர விரும்புவதாக மன்றுரைத்தார்.
சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் ஆயம் குறித்த வழக்கை எதிர்வரும் முதலாம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளது.
எனினும் அன்றைய தினத்துக்கு முன்னர், சட்ட மா அதிபர் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் ஆகிய தரப்பினர்களுக்கு இடையே கலந்துரையாடல் நடத்தப்பட்டு அதன்போது எட்டப்படும் தீர்மானம் தொடர்பில் மன்றுக்கு அறியப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சட்டமா அதிபர் திணைக்களத்தில் நாளை மறுதினம் முற்பகல் 10மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு தொடர்பில் சட்ட மா அதிபரால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.