ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்கவுக்கு அழுத்தம் கொடுத்த குற்றத்துக்காக அணியொன்றின் உரிமையாளருக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு பல்லேகலையில் நடைபெற்ற ‘லெஜண்ட்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற கண்டி சேம்ப் ஆர்மி அணியின் உரிமையாளரான யோகி படேல் என்ற இந்திய பிரஜைக்கே குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 8.5 கோடி ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் என அவருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அபராதத்தைச் செலுத்த தவறும் பட்சத்தில் மேலதிகமாக 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவித்தது.
அதேநேரம் மனுதாரரான உபுல் தரங்கவுக்கு 20 இலட்சம் ரூபாவினை இழப்பீடாக வழங்குமாறும் மாத்தளை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின் தீர்ப்பை அறிவித்த மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன, குறித்த உத்தரவை செயற்படுத்த தவறினால் மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவித்தார்.
உபுல் தரங்கவினால் மேற்கொள்ள முறைப்பாட்டையடுத்து, விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணை பிரிவினால் சந்தேக நபரான யோகி பட்டேல் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.