திருமலை எண்ணெய் தாங்கிகளை சர்வதேச எண்ணெய் களஞ்சியமாக மாற்றியமைக்க நடவடிக்கை!

திருமலை எண்ணெய் தாங்கிகளை சர்வதேச எண்ணெய் களஞ்சியமாக மாற்றியமைக்க நடவடிக்கை!

editor 2

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மறுசீரமைப்பது தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தோம். திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை சர்வதேச எண்ணெய் களஞ்சியமாக மாற்றியமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வலுசக்தி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உலகளாவிய ரீதியில் சக்தி வலுத்துறை காலத்துக்கு காலம் மாற்றமடையும், இதற்கேற்ப புதிய மாற்றுத்திட்டங்களை காலத்துக்கு காலம் அமுல்படுத்த வேண்டும்.

இலங்கையின் சக்தி வலுத்துறை தொடர்பில் அவதானம் செலுத்தும் போது புதிய திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

எரிபொருள் பாவனைக்கான கேள்வி தற்போது உயர்வடைந்துள்ள நிலையில் 2025-2026 வரையான காலப்பகுதியில் எரிபொருள் பாவனைக்கான கேள்வி குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2050 ஆம் ஆண்டுகளில் பெரும்பாலான நாடுகள் எரிபொருள் பாவனையில் இருந்து விடுப்பட்டு இயற்கைக்கு பாதிப்பட்ட வழிமுறைகளுக்கு செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருசில நாடுகள் கணிய எண்ணெய் ஆய்வுகளை மேற்கொள்ளபோவதில்லை என்ற தீர்மானத்தை கொள்கை ரீதியில் எடுத்துள்ளன. ஆகவே உலக நாடுகள் மாற்று சக்தி வலுத்துறை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன.

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் காற்றாலை முறைமையுடனான புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்துக்கு அதிக சாத்தியம் காணப்படுகிறது.

சூரிய மின்சக்தி உருவாக்கத்துக்கான அதிக சாத்தியம் காணப்படுகிறது. அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சக்தி வலுத்துறையில் உலக நாடுகள் மாற்று வழிமுறைகளுக்கு சென்றாலும், ஆசிய நாடுகள் மாற்றுத்திட்டங்களுக்கு செல்வதற்கு அதிக காலம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு ஆசிய நாடுகளின் பொருளாதார நிலைமை ஏதுவான காரணியாக அமைகிறது. இலங்கையின் மூலோபாய அமைப்பிடம் இதுவரை காலமும் முறையாக பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை.

இலங்கையை சக்தி வலுத்துறையின் கேந்திர மையமாக மாற்றியமைப்பது என்பது பிரதான இலக்காகும். முதல் அங்கமாக சீன முதலீட்டுடன் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏற்றுமதியை பிரதான இலக்காக கொண்டு இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. சபுகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் அதிக கொள்வனவுடனான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை தவிர்த்து நாட்டின் வலுசக்தி தொடர்பில் அவதானம் செலுத்த முடியாது. திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மறுசீரமைப்பது தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை சர்வதேச எண்ணெய் களஞ்சியமாக மாற்றியமைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.

திருகோணமலை துறைமுகத்தின் அமைப்பிடத்தை கருத்திற் கொண்டு அப்பகுதியை இயற்கை எரிவாயு உற்பத்தி மையமாக மாற்றியமைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எரிவாயு நிலத்தடி குழாய்களை புனரமைப்பதற்கான பணிகளை இன்னும் மூன்று மாதங்களில் மேற்கொள்வோம் என்றார்.

Share This Article