அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி – நாமல் கவலை!

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி - நாமல் கவலை!

editor 2

அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகம் அரசியல் ரீதியாக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இன்று நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் வியாபித்துள்ளதாகவும் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

எனவே இந்த விடயங்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் என்ற ரீதியில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி கலந்துரையாடியதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். 

கட்சியின் சட்டத்தரணிகள் சங்கத்தினர் உடனான சந்திப்பின் பின்னர் இதனைத் தெரிவித்தார். 

தொழிற்சங்க நடவடிக்கை,தொழில்முனைவோர், அரச அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் தலையீடு மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் கட்சியாக எப்படி முகம் கொடுப்பது பற்றியும் கலந்தாலோசித்துள்ளதாக குறிப்பிட்டார். 

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், 

“நீதி கட்டமைப்புக்குள் அரசியல் தலையீடு செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனை கட்சி என்ற ரீதியில் தடுக்க வேண்டும். இந்த சுயாதீன சட்டத்தரணிகள் அலுவலகம் 1970 ஆம் ஆண்டுகளில் காணப்பட்டது.

பின்னர் அரசியல் தலையீடு காரணமாக நீக்கப்பட்டது. இன்று சட்ட மா அதிபருக்கு உள்ள அதிகாரம், அரசாங்கத்துக்கும் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கும் உள்ள தெளிவின்மையை மறைத்து கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது.

அந்த அதிகாரத்தை வைத்து தனக்கு ஏற்றாற் போல் நீதிமன்ற கட்டமைப்பையும் நீதியையும் கொண்டு செல்ல அரசாங்கம் பயன்படுத்த பார்க்கிறது. இவ்வாறு செய்வதால் இந்த நாட்டு மக்களுக்கும், கட்சிகளுக்கும், அரசாங்கத்துக்கும் நன்மை நடக்காது.

இதன் இறுதி பலன் நாட்டுக்கு வருகைத் தரவுள்ள முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள். இன்றும் முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். சட்டத்தரணிகள் சங்கம் என்ற ரீதியில் இந்த விடயங்களுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்.” என்றும் தெரிவித்துள்ளார்.

Share This Article