எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் 9 கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக தமிழரசுக் கூட்டணி, சமத்துவ கட்சி ஆகியன இணைந்துள்ளன.
இந்த நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குறித்த கட்சிகள் ஒன்றிணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி எனும் பெயரில் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.