புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டவர் மஹரகம பகுதியைச் சேர்ந்த சமிந்து தில்சான் பியுமங்க கதனாராச்சி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது. தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது புதுக்கடை நீதிமன்றத்துக்குள் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
புதுக்கடை நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து அரசாங்கம் என்ற அடிப்படையில் கவலையடைகிறோம். திட்டமிட்ட பாதாள குழு தரப்பினருக்கு இடையில் அண்மைக்காலமாக முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
புதுக்கடை நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம்.ஒருசில மணிநேரத்துக்குள் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.மஹரக பகுதியைச் சேர்ந்த சமிந்து தில்சான் பியுங்க கதனாராச்சி என்ற பிரதான சந்தேக நபர் நேற்று புதன்கிழமை புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து 04.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிறிதொரு சந்தேக நபரான பெண்ணொருவரை கைது செய்வதற்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பாதாள குழுக்களின் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை.
பாதாள குழுக்களுக்கு இடையிலான தாக்குதல்கள் வழமையாகவே இடம்பெறுகிறது.தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று தற்போது குறிப்பிடும் தரப்பினரின் ஆட்சி காலத்தில் ஊடக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
ஊடகவியலாளர்களும் , சிவில் தரபபினரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களின் விசாரணைகளும் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் பல கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர்.ஆகவே இந்த ஓரிரு சம்வபத்தை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட முடியாது. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மக்களுக்கு உறுதியாக குறிப்பிடுகிறோம். நீதிபதிகளினது பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. என்றார்.