எந்தவொரு மாணவரும் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு இன்றைய தினம் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறந்த கல்விக்கான ஒரு மையமாக விளங்குகிறது.
எனவே, இங்கு உள்ளவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் வலியுறுத்த வேண்டிய தேவையில்லை.
சமூகத்தில் சிறந்த கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது.
அதற்கமைய, கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் இடைவிலகலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அனைவரும் சிறந்த கல்வியை கற்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.