யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் பூர்வீக காணி உரிமையாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தையிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை என்பது சட்ட ரீதியான அனுமதிகள் எவையும் பெற்றுக் கொள்ளப்படாமல், எமது மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பூர்வீக நிலங்களை இழந்துள்ள மக்கள் தங்களுடைய காணிகளை மீட்பதற்கு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் எம்மால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதன்படி, குறித்த விகாரை அமைந்துள்ள பகுதியை அளவீடு செய்து, முதற்கட்டமாக, அப்போது விகாரை கட்டுமானங்கள் அமைந்திருந்த சிறு பகுதியை தவிர ஏனைய பகுதிகளை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டன.
அதற்கு, பாதுகாப்பு அமைச்சு, படைத் தரப்பு மற்றும் சம்மந்தப்பட்ட விகாராதிபதி போன்றோர் சம்மதமும் தெரிவித்திருந்தனர்.
எனினும், அளவீட்டு பணிகளை மேற்கொள்வதற்கு சில தரப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அளவீட்டு பணிகள் பல தடவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், பூர்வீக காணி உரிமையாளர்களினால் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள அமைதி வழிப் போராட்டத்துக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி பூரண ஆதரவினை வழங்கும் எனவும் அந்த கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.