நாட்டின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அந்தவகையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊவா, தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மேக மூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும்.
இதேவேளை, இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.