நிதி முறைகேடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிரத்தியேக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கையூட்டலுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழு கோட்டை நீதவான் நிலுபுல் லங்காபுரவுக்கு அறியப்படுத்தியுள்ளது.
கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் டிரான்ஸ்வர்ட் சதுக்கத்தில், 4.3 ஏக்கர் பகுதி குத்தகைக்கு வழங்கப்பட்டபோது 70 மில்லியன் ரூபாய் நிதி முறைக்கேடு செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குற்றப்புலனாய்வு திணைக்களம் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி அழைக்கப்படும் எனவும் சட்டமா அதிபரின் ஆலோசனை அதற்கு முன்னதாக கிடைக்காவிடின் அறிவித்தல் அனுப்பப்படும் எனவும் நீதிவான் அறிவித்தார்.
ஊழலுக்கு எதிரான குரல் என்ற அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பான அறிக்கையும் மன்றில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் திறந்த மன்றில் முன்னிலையாகியிருந்ததாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவித்தன.