நவீன நாடக அரங்கின் மறுமலர்ச்சியாளன் குழந்தை ம.சண்முகலிங்கன் காலமானார்!

நவீன நாடக அரங்கின் மறுமலர்ச்சியாளன் குழந்தை ம.சண்முகலிங்கன் காலமானார்!

editor 2

ஈழத்தின் புகழ்பெற்ற நவீன நாடக அரங்கில் தனித்துவம் பெற்று விளங்கிய முது பெரும் கலைஞர் கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் இன்று இரவு காலமானார்.

குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிவரும் பத்திரிகை ஒன்றுக்காக 2011 ஆம் ஆண்டு யாழ்.பல்கலைககழகத்தின் தற்போதைய இசைத்துறைத் தலைவர் தவநாதன் றொபேட் அவர்கள், நேரில் சந்தித்து உரையாடி எழுதிய கட்டுரையை இங்கு வாசகர்களுக்காக தருகிறோம்.

முத்தமிழின் ஒரு கூறாக விளங்குவது நாடகக்கலை. இவற்றுள் ஒன்றான கூத்துப் பண்பாடானது ஈழத்தில் தொன்று தொட்டு இன்றுவரை செழித்தோங்கிக் காணப்படுகின்றது. இதே போல் கூத்து அல்லாத நாடக அரங்க முறைமைகளும் பெருவளர்ச்சி கண்டு வருகின்றன.

இக்கலைத்துறையில் கடந்த ஐம்பது ஆண்டுகளிற்கும் மேலாக நடிகனாகவும் நாடக எழுத்தாளராகவும் நெறியாளராகவும் பன்மொழிப் புலமையாளராகவும் ஒப்பற்ற சிந்தனையாளராகவும் நம்மிடையே விளங்கி;, ஈழத்து நவீன நாடக அரங்கை உயிர் பெறச்செய்த மறுமலர்ச்சியாளராகவும் இத்துறையை ஆற்றுகைக் கலையாக மட்டுமல்லாமல் கற்றலுக்கான பாடநெறியாகவும் அறிமுகம் செய்து, எண்ணற்ற வல்லுனர்களை உருவாக்கிப் பல ஆண்டுகளாக அளப்பெரும் பணியாற்றிவரும் நாடக அரங்கக் கல்லூரியை உருவாக்கிய பேராசானாகவும் திகழ்பவர் கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம்.

அமரர்களான மயில்வாகனம் – அசுவதி தம்பதிகளின் மகனாக 15.11.1931 இல் திருநெல்வேலியில் இவர் பிறந்தார். யாழ்.இந்துக்கல்லூரியில் தனது கல்வியைப் பெற்றுக்கொண்ட பின் 1953இல் சென்னைப் பல்கலைக்கழகம் சென்று நான்காண்டுகள் கற்றுக் கலைப்பட்டதாரியானார். 1957இல் தாயகத்தில் காலடி பதித்த இவர் ஆசிரிய நியமனம் பெற்று செங்குந்த இந்துக்கல்லூரியிலும் பளை மஹாவித்தியாலயத்திலும் பணியாற்றி 1987இல் ஓய்வுபெற்றார். இதன்பின் யாழ்.பல்கலைக்கழகத்தில் இத்துறைக்கான தற்காலிக விரிவுரையாளராகவும் வருகை விரிவரையாளராகவும் பதினேழு ஆண்டுகளாகப் பணியாற்றி ஆசிரியத்துவத்தின் இலக்கணமாகத் திகழ்ந்தார்.

சிந்தனைக்கு விருந்தாக வல்ல நகைச்சுவைகளை இடைவெளியில்லாமல் நடிப்புடனும் நயமுடனும் கூறும் திறன் இயல்பாகவே இவரிடம் இருந்தமையால் பத்தொன்பதாவது வயதில் நாடகத்துறையில் இணைத்துக்கொள்ளப்பட்டார். 1950இல் யாழ்.இந்து வாலிபர் சங்கத்தில் இணைந்து பல நாடகங்களைக் கூட்டு முயற்சியில் உருவாக்கி மேடையேற்றியதுடன் அருமை நண்பன் என்னும் நாடகத்தை முதன்முறையாக எழுதி நெறிப்படுத்தி மேடையேற்றிப் பலரது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டார். பன்முக ஆளுமைகளுடன் நாடகத்துறையில் புகழ்பெற்றுவந்த இவர் 1958இல் கலையரசு சொர்ணலிங்கத்தின் நெறிப்படுத்தலில் உருவான தேரோட்டி மகன் என்னும் நாடகத்தில் அருச்சுனனாக நடித்ததுடன் வழி தெரிந்தது என்னும் நாடகத்திலும் நடித்திருந்தார்.

ஆழமான தமிழறிவும் தெளிவான சிந்தனையும் கொண்டமைந்த இவரது நாடகங்கள், நாடக நடிகர்களாலும் எழுத்தாளர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டு அக்காலத்தில் மேடையேற்றப்பட்டு வந்தன. இதனால் புதிதாக நாடகங்களை எழுதும் இவரது முயற்சியானது வெற்றிபெறத் தொடங்கியது. 1973இல் எழுதப்பட்ட வையத்துள் தெய்வம் என்னும் நாடகமானது எஸ்.ரி.அரசுவின் நெறியாள்கையில் பலமுறை மேடையேற்றப்பட்டு 1974இல் உலகத்தமிழாய்ச்சி மாநாட்டிலும் அளிக்கை செய்யப்பட்டது.

1976இல் அரங்கத்தார் என்னும் நாடகக் குழுவை அமைத்துப் பல நாடகங்களை மேடையேற்றி வந்த இவர் அதேயாண்டில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நாடகம் கற்பித்தலுக்கான பட்டப் பின்படிப்பு டிப்ளோமாவை முடித்து, அக்கற்கை நெறியானது தந்த உணர்வாலும் பட்டறிவாலும் 23.01.1978இல் நாடக அரங்கக் கல்லூரியை உருவாக்கினார்.

ஈழத்தமிழ் நாடக வரலாற்றில் முதன் முதலாக நாடகத்தைக் கற்பித்து அனைவரும் இக்கலையைக் கற்றுக்கொள்ள வழிசமைத்து 1978இல் வரலாறு படைத்தது இவரது கல்லூரி. இக்கல்லூரியானது தொடங்கப்பட்ட போது அக்காலத்தில் நாடகக் கலைஞர்களாக இருந்த எஸ்.ரி.அரசு, ஏ.ரி.பொன்னுத்துரை, பிரான்சிஸ் ஜெனம், ஜி.பி.பேர்மினஸ், ரி.எஸ்.லோகநாதன், எஸ்.உருத்திரேஸ்வரன், சிசு.நாகேந்திரா, பொன்.ராஜன் க.சிதம்பரநாதன் போன்ற பலர் தம்மை மாணவர்களாக இணைத்துக் கொண்டனர். இவர்களிற்கான களப்பயிற்சிகளை வழங்கியவர்களுள் அ.தாசீசியஸ் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கல்லூரியானது கோடை, புதியதோர் வீடு, கந்தன்கருணை, சங்காரம், அபசுரம் போன்ற பல நாடகங்களைத் தொடர்ச்சியாக மேடையேற்றியது. நாடகத்துறையில் எழுச்சியையும் வளர்ச்சியையும் பெரும் திருப்பத்தையும் ஏற்படுத்திய இக்கல்லூரியின் கூடி விளையாடு பாப்பா என்னும் நாடகமானது ஈழத்தமிழ் அரங்க வரலாற்றில் முதலாவது சிறுவர் நாடகமாகக் கருதப்படுகிறது. இந்நாடகப் பிரதியை எழுதிய இவர் இன்றுவரை நூற்றுக்கும் அதிகமான நாடகங்களை எழுதியுள்ளதுடன் முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் உள்ளார்.

1983இற்குப் பின்னர் தனது நாடகப் பணியைப் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களிற்கு நேரடியாக வழங்கியதுடன் ஆசிரியர்களிற்கான களப்பயிற்சிகளையும் வழங்கி ஆளுமை கொண்ட நாடக மாந்தரை உருவாக்கியதுடன் நாடகத்தை நடிக்க இருப்பவர்களுடன் கலந்துரையாடி நாடகத்திற்கான கருப்பொருளைத் தெரிவு செய்யும் பண்புடையவராகவும் இப்பண்பாட்டை ஏனையவர்களிற்கும் கற்பித்த ஞானியாகவும் விளங்குகின்றார்.
அன்னையிட்ட தீ, மண்சுமந்த மேனியர், வேள்வித் தீ, எந்தையும் தாயும், நரகொடு சுவர்க்கம், நீசெய்த நாடகமே போன்ற நாடக எழுத்துருக்கள் இவரிற்கு அழியாப் புகழ் சேர்த்தவை என்பதில் ஐயமில்லை. இவற்றுள் ‘மண்சுமந்த மேனியர்’ யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெங்கும் மேடையேற்றப்பட்டு அனைத்து நிலை ரசிகர்களையும் கொள்ளை கொண்டிருந்தமை உலகறிந்ததே.

இவ்வாறு நாடகத்துறையில் முற்றிப் பழுத்த பழமாகத் திகழ்ந்து வரும் இவரது ஆர்கொலோ சதுரர் என்னும் நடன நாடகமானது 2003இல் மேடையேற்றப்பட்ட போது ஈழத்து நாட்டிய நாடக மரபானது பெரும் மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டது. தற்போது இசைநாடக நடிகர்களிற்குரிய அரங்கப் பயிற்சிகளை வழங்கிவரும் இவர் மாலைகளுக்கோ பொன்னாடைகளுக்கோ பட்டங்களுக்கோ தலைவணங்காத தன்மானமுள்ள ஒரேயொரு கலைஞராக ஈழத்தில் கலைப்பணியாற்றி வருகின்றார்.

துறைசார்ந்த வல்லுனர்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் பணியாற்றுவதன் ஊடாகவே அத்துறையை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். பல நாடக மேதைகளுடன் இணைந்து இரவு பகல் பாராது பணியாற்றியதன் பட்டறிவு இன்று வரை எனக்கு உதவுகின்றது. ஆனால் தற்காலத்தில் இணைந்து பணியாற்றும் பண்பாடானது அருகி வருகின்றது என்றே கூறலாம். தன்னம்பிக்கையின்மையும் தங்கள் பெயர் மறைந்து விடுமோ என்னும் சுயநலம் கொண்ட அச்சமும் இவ்வாறான நிலையை எம்மத்தியில் தோற்றுவித்துள்ளது என்று தனது கருத்துக்களை இவர் கூறுகின்றார்.

தவநாதன் றொபேட்

13.11.2011

Share This Article